திருச்சி-இலங்கை இடையே விமான சேவை குறைப்பு

திருச்சி-இலங்கை இடையே விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது.;

Update:2022-07-04 03:01 IST

செம்பட்டு:

தினமும் 2 விமானங்கள் இயக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிக அளவிலான பயணிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு பயணம் செய்கின்றனர். வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் இலங்கை வழியாக சென்று வருகின்றனர்.

திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை அதிக அளவில் வளைகுடா நாட்டு பயணிகள் இலங்கை வழியாக சென்று வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து 40 ஆண்டுகளாக இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வழங்கி வருகிறது. முதலில் வாரத்திற்கு 3 சேவைகளாக இருந்து வந்த நிலையில், பின்னர் படிப்படியாக சேவைகள் அதிகரிக்கப்பட்டு தினமும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

விமான சேவை ரத்து

இதில் காலை 9.30 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு வரும் விமானம், மீண்டும் திருச்சியில் இருந்து இலங்கை நோக்கி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதேபோன்று மதியம் 2.30 மணிக்கு ஒரு விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்து, மீண்டும் மாலை 3.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு செல்லும். மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 5 டன்கள் உணவு பொருட்கள் அந்த விமானங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலை காரணமாக, திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த 2 சேவைகளில் மதியம் இயக்கப்படும் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு திருச்சியில் இருந்து ெபாருட்கள் ஏற்றுமதிக்கான கார்கோ சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு சேவையும் ரத்தாகிறது

முன்னறிவிப்பின்றி திடீரென கடந்த 1-ந் தேதி முதல் அந்த விமான சேவைகள் ரத்து அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று முதல் மதிய நேர விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அன்னியச் செலாவணி பாதிக்கப்படுவதுடன் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இலங்கையின் தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக தற்போது இயக்கப்பட்டு வரும் காலை நேர விமான சேவையும் ரத்து செய்ய இருப்பதாக தெரியவருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்