பல்லாவரம் அருகே ரூ.40 கோடி அரசு நிலம் மீட்பு
பல்லாவரம் அருகே ரூ.40 கோடி அரசு நிலத்தை தாசில்தார் தலைமையிலான வருவாய்த்துறையினர் மீட்டனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விநாயகா நகரில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட மெய்க்கால் புறம்போக்கு நிலத்தை தனியார் ஒருவர், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து வைத்திருந்தார். அந்த நிலத்தில் 10 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். இது சம்பந்தமாக வந்த புகாரை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, அரசு நிலத்தை மீட்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
அதன்படி தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, பல்லாவரம் தாசில்தார் சகுந்தலா தலைமையிலான வருவாய்த்துறையினர் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.40 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.