கோவிலுக்கு சொந்தமான ரூ.75 லட்சம் நிலம் மீட்பு

தரங்கம்பாடி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.

Update: 2023-02-15 18:45 GMT

திருக்கடையூர்:

தரங்கம்பாடி அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.75 லட்சம் மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே மடப்புரம் சேக்கிழார் வீதியை சேர்ந்தவர் தனபாக்கியம். இவர் கடந்த 1966-ம் ஆண்டு ஆக்கூரில் உள்ள தான்தோன்றீஸ்வரர், ராஜகோபால பெருமாள் கோவிலுக்கு அதே பகுதியில் 88 சென்ட் நிலத்தை உயில் எழுதி கொடுத்துள்ளார். இந்த நிலம் கடந்த 58 ஆண்டுகளாக கோவில் பெயருக்கு கொண்டு வரப்படாமல் ஆவணம் எழுதிக் கொடுத்தவர் பெயரிலேயே வருவாய் ஆவணங்களில் இருந்து வந்தது.

இந்த நிலத்தை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து இருந்தனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், உதவி ஆணையர் ராணி ஆகியோரின் அறிவுரைப்படி ஆக்கிரமிப்பில் இருந்த கோவில் நிலத்தை மீட்டு ஆக்கூரில் உள்ள தான்தோன்றீஸ்வரர் மற்றும் ராஜகோபால பெருமாள் கோவிலுக்கு பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அறிவிப்பு பதாகை

அதன்படி இந்து சமய அறநிலையத்துறை தனி தாசில்தார் விஜயராகவன் தலைமையில் நிலத்தை மீட்டு கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது. அப்போது தான்தோன்றீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் உமேஷ் குமார், மடப்புரம் கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், கோவில் அலுவலர்கள் சதீஷ்குமார், ராஜேந்திரன், ஸ்ரீவித்யா, நில அளவர் பக்கிரி சாமி ஆகியோர் உடன் இருந்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்