இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலம் மீட்பு

நாகர்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2022-09-30 20:07 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

ரூ.17 லட்சம் பாக்கி

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் குமரி மாவட்டத்தில் ஏராளமாக உள்ளன. அவற்றை சிலர் ஆக்கிரமித்தும், சிலர் குத்தகைக்கு எடுத்து குத்தகை பணம் செலுத்தாமலும், வாடகை தொகையை செலுத்தாமல் இருப்பதும் கண்டறியப்பட்டு அந்த நிலங்கள் அதிகாரிகளால் மீட்கப்பட்டு வருகிறது. இதேபோல் வேதநகர் பகுதியில் தனியார் ஒருவர் குத்தகை பாக்கி செலுத்தாமல் வைத்திருந்த நிலத்தை அறநிலையத் துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் இணைந்து நேற்று மீட்டனர்.

புத்தளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கரியமாணிக்கபுரத்தில் உள்ள முப்பிடாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தார். அந்த நிலம் வேதநகர் ஹவாய் நகர் 9-வது தெருவில் உள்ளது. மொத்தம் 3 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்த அந்தப் பெண் எந்த விவசாயமும் செய்யாமல் அப்படியே தரிசாக போட்டு வைத்திருந்தார். மேலும் அவர், இந்து சமய அறநிலையத்துறைக்கு குத்தகை பாக்கி ரூ.17 லட்சம் செலுத்தவில்லை.

ரூ.25 கோடி நிலம் மீட்பு

அதனைத்தொடர்ந்து நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம் தலைமையில் தனி தாசில்தார் (ஆலய நிலங்கள்) சஜித், முப்பிடாரி அம்மன் கோவில் செயல் அதிகாரி ரகு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் அந்த நிலத்தை மீட்டனர். அந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் என்ற பெயர் பலகையும் வைக்கப்பட்டது.

அந்த நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த நிலத்தை வேறு நபருக்கு குத்தகை விடுவதற்கான ஏல நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும், அந்த பணத்தை அறநிலையத்துறை கணக்கில் சேர்க்கப்படும் என்றும், குத்தகை பாக்கி ரூ.17 லட்சம் செலுத்தாமல் உள்ள அந்த பெண் மீது தனியாக நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்