சமூகவலைதளத்தில் முதியவர் இழந்த ரூ.1.10 லட்சம் மீட்பு
சமூகவலைதளத்தில் முதியவர் இழந்த ரூ.1.10 லட்சத்தை போலீசார் மீட்டனர்.;
நெல்லை மாவட்டம் துலுக்கர்பட்டியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 63). இவர் சமூக வலைதளத்தில் வந்த காய்கறி விற்பனை செய்வது தொடர்பான விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு காய்கறி வியாபாரம் செய்வதற்காக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார்.
இதையடுத்து மனோகரன், பணத்தை மீட்டுத்தருமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனிடம் புகார் மனு அளித்தார். அவரது உத்தரவுப்படி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மனோகரனின் பணத்தை மீட்டு, அதற்கான ஆவணத்தை சைபர் கிரைம் போலீசார் நேற்று அவரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தொழில் ரீதியாக இணையதளத்தில் வியாபாரம் செய்யும் போது நிறுவனம் பற்றி நன்கு அறிந்தும், விற்பனை செய்பவர்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து செயல்பட வேண்டும்ம். மேலும் சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் தொலைபேசி எண்ணிலோ புகார் அளிக்கலாம் என்று நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ராஜூ கூறிஉள்ளார்.