பள்ளிப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
பள்ளிப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.;
நிலம் ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா கீச்சலம் கிராமத்தில் உள்ள வாய்க்கால் புறம்போக்கு இடத்தை அங்குள்ள தனிநபர் ஆக்கிரமித்து இரும்பு வேலி போட்டு தடுத்து அதில் தென்னங்கன்றுகளை நட்டு வைத்ததாக பள்ளிப்பட்டு தாசில்தாருக்கு அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் புகார் மனு அளித்தார். அதில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். இதுகுறித்து உடனடி நடவடிக்கை தேவை என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதை அறிந்த பள்ளிப்பட்டு தாசில்தார் தமயந்தி மற்றும் வருவாய்த்துறை சேர்ந்தவர்கள், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்குள்ள கால்வாய் புறம்போக்கு இடத்தை நில அளவை அலுவலர்கள் மூலம் அளந்து பார்த்தனர்.
அரசு நிலம் மீட்பு
அப்போது கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து இரும்பு வேலியிட்டு தடுத்து அதில் தென்னங்கன்றுகளை நட்டு இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து நட்டு வைத்துள்ள இரும்பு வேலியை அகற்றும்படி தாசில்தார் தமயந்தி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து வருவாய்த்துறை ஊழியர்கள் அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு நிலத்தை மீட்டனர்.