மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் மீட்பு
திருப்பரங்குன்றம், நிலையூர் பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.;
நில ஆக்கிரமிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏராளமான நிலம் உள்ளது. இதனை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கோவிலுக்கு பாதியப்பட்ட நிலங்களை கண்டறிந்து அதனை மீட்டெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான நிலம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூரில் ஏக்கர் கணக்கில் இருப்பது தெரியவந்தது. அதை தொடந்து அந்த நிலத்தை மீட்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு இருந்தது.
7 ஏக்கர் நிலம் மீட்பு
அதை தொடர்ந்து கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் தலைமையில் உதவி கமிஷனர் யக்ஞநாராயணன், தாசில்தார் சிவக்குமார். கோவில் பணியாளர்கள் மற்றும் போலீசார் நிலையூர் பகுதிக்கு சென்றனர். அங்கு பல்வேறு இடங்களில் இருந்த 7 ஏக்கர் 16 சென்ட் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு சுமார் 36 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் அந்த இடங்களில் கோவில் சார்பில் அறிவிப்பு பலகையும் ஊன்றப்பட்டது.