ரூ.10 கோடி மதிப்பிலான 35 ஏக்கர்

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 35 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டது.;

Update: 2023-09-21 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 35 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டது.

35 ஏக்கர் நிலம்

கொள்ளிடம் அருகே ஆணைக்காரன் சத்திரம் தைக்கால் கிராமத்தில் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 35 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங்களை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஒன்றியம் சார்பில் சுமார் ரூ. 10 கோடி மதிப்பிலான நிலத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் சார்பில் நில உரிமை தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதாக தெரிகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு ஊராட்சி ஒன்றியத்திற்கு சார்பாக வந்ததையடுத்து நிலத்தை மீட்கும் பணியில் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு துணை தலைவர் பானுசேகர், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், ஒன்றிய ஆணையர் தியாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, வருவாய் ஆய்வாளர் தமிழ்வேந்தன், உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

நிலங்கள் மீட்பு

இதையடுத்து இவர்கள் முன்னிலையில் பொக்லின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நடந்தது. மேலும் நில அளவையர்களை கொண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான இடங்களை அளவிடும் பணி மற்றும் நிலத்தை கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது அதிகாரிகள் முதற்கட்டமாக 6.5 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து கையகப்படுத்தியுள்ளனர்.

மீதமுள்ள நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதற்கு முன்பு தைக்கால் கிராமத்தில் உள்ள வியாபாரி சங்கங்கள் மற்றும் பொதுமக்களிடம் அமைதிபேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்கள் கோரிக்கை ஏற்று நிறைவேற்றப்படுவதாக தெரிவித்ததன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்