சிறப்பு யாக பூஜை நடத்தி திருட்டில் மீட்கப்பட்ட தங்க மூக்குத்திகள் மடப்புரம் பத்திரகாளியம்மனுக்கு அணிவிப்பு

சிறப்பு யாக பூஜை நடத்தி திருட்டில் மீட்கப்பட்ட தங்க மூக்குத்திகள் மடப்புரம் பத்திரகாளியம்மனுக்கு அணிவிக்கப்பட்டன.

Update: 2023-04-24 18:45 GMT

திருப்புவனம்,

சிறப்பு யாக பூஜை நடத்தி திருட்டில் மீட்கப்பட்ட தங்க மூக்குத்திகள் மடப்புரம் பத்திரகாளியம்ம னுக்கு அணிவிக்கப்பட்டன.

பத்திரகாளியம்மன் கோவில்

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மார்ச் 1-ந்தேதி இரவு பூஜை முடிந்து கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.

அப்போது அதிகாலை நேரத்தில் வந்த மர்ம ஆசாமிகள் பத்திரகாளியம்மன் அணிந்திருந்த இரண்டு தங்க மூக்குத்திகளையும் திருடி சென்றனர். மறுநாள் காலை பூஜையின் போது பார்த்த பூசாரிகள் மூக்குத்திகள் காணாமல் போனது குறித்து திருப்புவனம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்து 3 பேரை பிடித்து வழக்கு பதிவு செய்தும், பத்திரகாளியம்மன் தங்க மூக்குத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

சிறப்பு யாக பூஜை

இந்த நிலையில் நேற்று பத்திரகாளி அம்மனுக்கு தங்க மூக்குத்திகள் அணிவிக்க சிறப்பு பூஜை நடந்ததது.

அதன்பிறகு பத்திரகாளி அம்மனுக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டும் பாலாபிஷேகம், சந்தன அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிவகங்கை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையிலும் உதவி ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் சிறப்பு யாகம் நடந்தது.

வேத மந்திரங்கள் முழங்க பத்திரகாளி அம்மனுக்கு தங்க மூக்குத்திகள் அணிவிக்கப்பட்டது.

அதன்பின் யாகத்தில் உள்ள கலச நீரால் பத்திரகாளி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சபர்மதி பாலபோதகுரு, முன்னாள் அறங்காவலர்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில் அலுவலக பணியாளர்கள், பூசாரிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்