பல்லடம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் அருகே உள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் ரோட்டரி மின் மயான அறக்கட்டளை மூலம் ரூ.4 கோடியில் நவீன மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த நிலம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் பல்லடம் நகராட்சி நிர்வாகம் 8-வது வார்டு பச்சாபாளையத்தில் நீரோடை உள்ள பகுதியில் நவீன எரிவாயு தகனமேடை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. அந்த பகுதியில் ரேஷன் கடை, தனியார் பள்ளி உள்ளது. ஏற்கனவே கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. அந்த ரோடு வழியாகத்தான் உடலைக்கொண்டு வரும் வாகனங்கள் சென்று வர வேண்டும். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் ஏற்கனவே மின்மயான திட்டம் செயல்பட்டு வருகின்ற வேளையில் புதிதாக மற்றொன்று அமைப்பது மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் ஆகும். ஏற்கனவே பல்லடம் நகராட்சி பல்வேறு திட்டப்பணிகளுக்கு போதிய நிதி ஆதாரமில்லாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-------------