ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நகை-பணம் பறிப்பு

போலீஸ் எனக்கூறி நடித்து ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நகை-பணம் பறித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-17 18:45 GMT

கோவை

போலீஸ் எனக்கூறி நடித்து ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி நகை-பணம் பறித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் அதிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பாவக்கல் பகுதியை சேர்ந்தவர் சஜீவ்(வயது 42). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

தற்போது பெங்களூரு டாலர் கம்பெனி பகுதியில் வசித்து வரும் சஜீவுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சிலர், கிருஷ்ணகிரியில் நிலம் வாங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து சஜீவ் கடந்த 8-ந் தேதி கிருஷ்ணகிரிக்கு வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். தொடர்ந்து சென்னையில் இருந்து கேட்ட நபர்களுக்கு நிலம் விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

காரில் கடத்தல்

இதையடுத்து கடந்த 10-ந் தேதி சஜீவ் தங்கியிருந்த விடுதி அறைக்கு, 7 பேர் கொண்ட கும்பல் வந்தது. அந்த கும்பல் தங்களை தமிழக சிறப்பு படை போலீசார் என்று சஜீவிடம் அறிமுகப்படுத்தி கொண்டது. மேலும் அவரிடம், 'நிலம் மற்றும் இரிடியம் விற்பனை செய்வதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறீர்கள், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும்' என கூறி அந்த கும்பல் காரில் கடத்தி சென்றது.

அங்கிருந்து கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காரில் கடத்தி சென்ற அந்த கும்பல், அவரின் சொத்து விவரங்களை கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. மேலும் கோவைக்கு அழைத்து வந்து காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் அவருடன், அந்த கும்பல் அறை எடுத்து தங்கியது.

பணம் கேட்டு மிரட்டல்

இதற்கிடையில் அந்த அறைக்கு ஏற்கனவே சஜீவுக்கு அறிமுகமான கிப்சன், சிபின் மற்றும் அலெக்ஸ் ஆகிய 3 பேர் வந்தனர். இதில் சிபின் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் தங்களை கேரளாவை சேர்ந்த போலீசார் என்றும், சாதாரண உடையில் வந்திருப்பதாகவும் கூறினர். மேலும் அவர்கள் மலையாளத்தில் பேசினர். பின்னர் அவர்கள் 3 பேரும், மற்ற 7 பேருடன் சேர்ந்து சஜீவிடம் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர், தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறினார்.

போலீஸ் வலைவீச்சு

இதனால் அந்த கும்பல் சஜீவிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 30 பவுன் நகைகளை பறித்து கொண்டனர். பின்னர் மீண்டும் சஜீவை காரில் கடத்தி சென்று கோவை-சேலம் சாலையில் ஒரு சோதனைச்சாவடி அருகே இறக்கி விட்டு தப்பி சென்றனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த சஜீவ், கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்திவு செய்து ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்தி பணம், நகை பறித்த 10 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்