ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்ட தயாராகும் காளைகள்; பரிசுகளை வெல்ல மாடுபிடி வீரர்களும் தீவிரம்

ஜல்லிக்கட்டில் மல்லுக்கட்டுவதற்காக காளைகள் தயாராகி வருகின்றன. அதேபோல் பரிசுகளை வெல்ல மாடுபிடி வீரர்களும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

Update: 2023-01-13 20:30 GMT

தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு

ஏறு தழுவுதல் என்பதே ஜல்லிக்கட்டின் பொருள். ஏறு என்றால் காளை. தழுவுதல் என்றால் அடக்குதல் என்பது பொருள். காளைகளை தழுவி அடக்குதல் என்பதே ஏறு தழுவுதல் என்று பண்டைய காலத்தில் இருந்து அழைக்கப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்களையே பெண்கள் தங்களது மணமகனாக தேர்வு செய்தனர். மேலும் அப்போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நாணயங்களை சல்லிகாசுகள் என்று அழைத்தனர்.

அந்த சல்லிகாசுகளை ஏறு தழுவுதல் நிகழ்ச்சியின்போது, காளைகளின் கொம்புகளில் கட்டி விடுவர். அதன்பிறகு வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளையை அடக்கி, சல்லிகாசுகளை மாடுபிடி வீரர்கள் பறிக்க வேண்டும். அப்போது அந்த சல்லிகாசுகள் அவருக்கு சொந்தமானதாகும். இவ்வாறு சல்லிகாசுகளை வைத்து விளையாடிய விளையாட்டு காலப்போக்கில் சல்லிக்கட்டு அல்லது ஜல்லிக்கட்டு என்றானது.

காளைகளுக்கு பயிற்சி

ஜல்லிக்கட்டுக்கு உலக புகழ்பெற்றது, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. அதற்கு அடுத்தபடியாக அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளிலும், தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, அய்யம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு பெயர்பெற்றது.

இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் காளைகளின் உரிமையாளர்களும், தங்களது காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயார் செய்து வருகின்றனர். அதன்படி, காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர். அவற்றுக்கு மூச்சு பயிற்சி, நீச்சல் பயிற்ச்சி, மண்மேட்டினை கொம்புகளால் குத்தும் பயிற்சி, ஓடும் பயிற்சி உள்பட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பயிற்சிக்கு ஏற்ற உணவுகளை காளைகளுக்கு அளித்து வருகின்றனர்.

மாதிரி வாடிவாசல்

இதேபோல் மாடுபிடி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாதிரி வாடிவாசல் அமைத்து, அதில் காளைகளை அவிழ்த்துவிட்டு பயிற்சி எடுக்கின்றனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளையை எவ்வாறு பிடிக்க வேண்டும்?, காளைகளை எப்படி அடக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளை அடக்கும் வீரர்களுக்கு முந்தைய காலங்களில் சைக்கிள், கட்டில், பாத்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டு வந்தன. இந்தநிலையில் சமீப காலமாக அதிக காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார், மோட்டார் சைக்கிள், தங்க காசுகள், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இது மாடுபிடி வீரர்களிடையே புது உத்வேகத்தை அளித்துள்ளது. இதனால் மாடுபிடி வீரர்கள் பரிசுகளை வெல்ல இரவு-பகலாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து தேனியை சேர்ந்த காளை உரிமையாளர் கலைவாணன் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் நாங்களும் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். காளைகளுக்கு வழங்கப்படும் உணவில் தொடங்கி பயிற்சி வரை அனைத்திலும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் எடுக்கும் வேகம் தான் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓட உதவும். இதற்கு காளைகளுக்கு நல்ல மூச்சு பயிற்சி அவசியம். இதனால் காளைகளுக்கு தினமும் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வேலையில் முன்னுரிமை

மேலும் கூட்டமாக நிற்கும் வீரர்களை கண்டு மிரளாமல் இருக்க வாடிவாசலை அமைத்து கும்பலாக ஆட்களை நிறுத்தி தாவி ஓடும் பயிற்சியையும் காளைகளுக்கு அளித்து வருகிறோம். காளையின் திமிலை பிடித்து அடக்கும் வீரர்களிடம் இருந்து உடலை திருப்புவதற்காக மண்ணை குத்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர காளைகளுக்கு பச்சரிசி, தேங்காய், பேரிச்சம்பழம் கலவை மற்றும் உளுந்து, பருத்தி விதையை அரைத்து உணவாக வழங்கி வருகிறோம் அது உடலை திடமாகவும் கால்கள் உறுதியாகவும் இருக்க உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாடுபிடி வீரர் சுரேஷ் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டியில் தீரத்துடன் போராடி காளைகளை அடக்கும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். குறிப்பாக போலீஸ், ராணுவம் உள்ளிட்ட வேலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்