அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார்...!ஆனால் கட்சியை இணைக்க வாய்ப்பில்லை-டிடிவி தினகரன்

தி.மு.க.வை அழிக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார்.

Update: 2022-10-12 11:07 GMT

சென்னை:

மின்கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே டிடிவி தினகரன் தலைமையில் அமமுக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது;-

தமிழை பயன்படுத்தி தமிழக மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் தி.மு.க.வினர். தற்போது புதிதாக மதத்தை கையில் எடுத்துள்ளனர்.

அனைத்து மதத்தையும் ஒன்றாக பார்க்கும் மக்கள் வாழும் நாடு தமிழ்நாடு. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் மக்கள் வாக்களிப்பதில்லை, நல்லாட்சி வேண்டும் என்றுதான் வாக்களிப்பர்.

ராஜாஜி, காமராசர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மக்களுக்கான ஆட்சியாக மக்களை எஜமானார்களாக கருதி நடந்த ஆட்சி.

எம்.ஜி.ஆர். தயவால் ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி. ஆனால். எம்.ஜி.ஆருக்கே துரோகம் செய்து கட்சியை விட்டு நீக்கினார். எம்.ஜி.ஆர். மறைவின் பிறகு தொண்டர்கள் குழப்பத்தில் இருந்ததால் விபத்தாக தி.மு.க. ஆட்சி அமைந்தது.

2016க்கு பிறகு துரதிருஷ்டவசமாக 4 ஆண்டுகள் அண்ணன் பழனிசாமி தலைமையில் ஆட்சி நடந்தது. எடப்பாடி பழனிச்சாமியின் தவறான நிர்வாகம், முறைகேடு, ஊழல், திருவிளையாடல்களால் மக்கள் கோபம் கொண்டு தி.மு.க.வை தேர்ந்தெடுத்தனர்.

நாங்கள் திருந்தவே இல்லை என பிரகடனம் செய்யும் விதமாக திமுக ஆட்சி தற்போது நடக்கிறது. நிதி நிலை மோசமாக இருந்தபோதும் மக்களை ஏமாற்ற பொய்யான வாக்குறுதியை கொடுத்தனர் தி.மு.க.வினர்.

பொதுக்குழுவில் தூக்கம் வராமல் தவிப்பதாக கூறினார் ஸ்டாலின். ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா..? பொழுது விடிந்தால் அமைச்சர் பதவி இருக்குமா என தெரியாது.

தவறு செய்தால் அமைச்சர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை போல கண்டிப்புடனும், மக்களிடம் கனிவாகவும் இருந்தார் ஜெயலலிதா.

பழனிசாமி செய்துள்ள கோல்மாலால் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று தொண்டர்களால் போட்டியிட முடியாத சூழல்.

ஜெயலலிதா இருந்தவரை நீட் இல்லை, விவசாயிகளை பாதிக்கும் திட்டங்கள் இல்லை. ஜெயலலிதா இயற்கையான தலைவர், வாரிசு தலைவரோ, உருவாகப்பட்ட தலைவரோ அல்ல.

ஜெயலலிதா தனக்கு பிறகு யாரையும் கட்சி தலைமைக்கு ஏற்பாடு செய்யவில்லை. தலைவர் பதவி வாரிசு பதவியில்லை என ஜெயலலிதா தொடர்ந்து கூறி வந்தார். யார் தலைவராக வர வேண்டும் என தொண்டர்களே தீர்மானிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆ.ர் கூறியிருந்தார்.

செந்தில் பாலாஜியால் தான் இன்று தி.மு.க.வில் பிரச்சினையே ஏற்பட்டுள்ளது. துரைமுருகன் படித்தவர் , 80 வயதை கடந்தவர் அவரது பேச்சு ஜமீன்தார் போல இருக்கிறது. பொதுவெளியில் ஒரு மருத்துவரிடம் எப்படி நடந்து கொண்டார். கன்னியாகுமரிக்கு தூக்கி அடிப்பேன் என்கிறார்.

அமைச்சர் பொன்முடி தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார்; இவர் போகும் கார், வீடு எல்லாம் ஓசி. ஆனால் அகங்காரம், ஆணவத்தால் எஜமானர்களாகிய மக்களை ஓசி என கூறுகிறார்.

பல கட்சி மாறும் ராஜகண்ணப்பன் அதிகாரியை சாதியை சொல்லியுள்ளார். கனிமொழி துணைப்பொதுச் செயலாளராகி உள்ளார். கட்சியில் வேறு யாருமே இல்லையா. தி.மு.க. வாரிசு அரசியலால் மடம் போல இருக்கிறது. தி.மு.க.வில் பயத்தால்தான் கனிமொழிக்கு பதவி கொடுத்துள்ளார்கள்.

தி.மு.க.போல தொடை நடுங்கி கிடையாது நாங்கள். பொய் பித்தலாட்ட தி.மு.க. ஆட்சியின் ஆயுள்காலம் முடிவதற்கான அறிகுறி தென்பட்டுவிட்டது.

இந்தி திணிப்பை மத்திய அரசு செய்தால்,மற்றவர்களோடு நாங்களும் தோளோடு தோள் கொடுத்து எதிர்ப்போம்.

தி.மு.கவை அழிக்க அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தயார். ஆனால் கட்சியை ஒன்றிணைக்க வாய்ப்பில்லை. கடந்த முறை இதே கருத்தை முன்வைத்தேன். ஆனால் சிலரது ஆணவ போக்கால் அது ஈடேறவில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி, சேலம், நெல்லை, உள்பட பல்வேறு மாவட்டங்களில் அமமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்