ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க ஆலோசனை

மணல்மேட்டில், பஞ்சாலை செயல்பட்ட இடத்தில் ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க ஆலோசனை அமைச்சர் காந்தி தலைமையில் நடந்தது.

Update: 2023-06-20 19:15 GMT

மணல்மேடு;

மணல்மேட்டில், பஞ்சாலை செயல்பட்ட இடத்தில் ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்க ஆலோசனை அமைச்சர் காந்தி தலைமையில் நடந்தது.

பஞ்சாலை

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு பகுதியில் 1965-ம் ஆண்டில் இருந்து இயங்கிவந்த பஞ்சாலை 2003-ம் ஆண்டு மூடப்பட்டது. இந்த ஆலை அமைந்திருந்த 34 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடங்களுடன் பல ஆண்டுகளாக உள்ளது.இந்தநிலையில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மணல்மேடு பஞ்சாலை இருந்த இடத்தில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என மயிலாடுதுறை ராஜகுமார் எம்.எல்.ஏ. மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.இதைத்தொடர்ந்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, துணிநூல்துறை ஆணையர் டாக்டர் வள்ளலார், மயிலாடுதுறை மாவட்ட கலெக்்டர் மகாபாரதி மற்றும் மண்டல துணை இயக்குனர்கள் உள்பட அதிகாரிகள் பஞ்சாலை இருந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆயத்த ஆடை

இதைத்தொடர்ந்து ஆலை செயல்பட்ட இடத்தில் ஆயத்த ஆடை நிறுவனம் தொடங்குவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ராமலிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜகுமார், பன்னீர்செல்வம், நிவேதாமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் கல்யாணம், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் ஆலை இருந்த இடத்தில் கைத்தறி மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்பு , சூரியஒளி மின்சாரம் தயாரிப்பு போன்றவை அமைக்க ஆலோசிக்கப்பட்டது. மேலும் இது குறித்த விரிவான அறிக்கையை தமிழக முதல்-அமைச்சரிடம் சமர்ப்பித்து அதன்பிறகு முடிவு அறிவிக்கப்படும் என அமைச்சர் காந்தி கூறினாா். கூட்டத்தில் மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணிஅறிவடிவழகன், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் இளையபெருமாள், முருகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்