அரசு பள்ளியில் வாசகர் வட்டம் தொடக்கம்

புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க அரசு உயர்நிலைப் பள்ளியில் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-07-25 22:15 GMT

பொள்ளாச்சி

புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க அரசு உயர்நிலைப் பள்ளியில் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

வாசகர் வட்டம்

பொள்ளாச்சி அருகே பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக பாராம்பரிய கலை கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும் திறம்பட கேள் என்ற நிகழ்வின் மூலம் மாதந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்க வாசகர் வட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

பொள்ளாச்சி இலக்கிய வட்ட தலைவர் அம்சபிரியா வாசகர் வட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் ஒரு எழுத்தாளர் எப்படி உருவாகிறார்?, நமது எண்ணங்களை எப்படி எழுத்து வடிவில் கொண்டு வர வேண்டும்?, நாம் எவற்றையெல்லாம் எழுத இயலும் என்று குழந்தைகளோடு கலந்துரையாடி மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார். தமிழாசிரியர் கனகராஜ் மற்றும் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த பள்ளியின் தமிழாசிரியர் பாலமுருகன் கூறியதாவது:-

நல்ல எழுத்தாளர்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் தற்போது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றவும் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும் பள்ளியில் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு புத்தகங்கள் தானமாக பெறப்பட்டு பள்ளி நூலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன. வாசகர் வட்டத்திற்கு பள்ளியில் நடைபெற்ற இலக்கிய போட்டிகளில் தனித்திறமைகளை வெளிப்படுத்திய மாணவ-மாணவிகள் இலக்கிய மன்றம் சார்பாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் போதும் அவர்களின் படைப்பாற்றல் திறன், கற்றல் திறன், கற்றல் வேகம் அதிகரிக்கும். மேலும் புதியவற்றை புரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும் என்பதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாணவர்களுக்கும் நூல்கள் வாசிக்க வழங்கப்பட்டது. அடுத்த கூட்டத்தில் வாசித்த புத்தகம் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும். இம்முயற்சியை தொடர்ந்து தொய்வின்றி செய்யும் சூழலில் ஒரு மிகப்பெரிய சமூக மாற்றம் ஏற்படும். வருங்கால தலைமுறை நல்ல எழுத்தாளர்களை அடையாளம் காண முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்