ராஜாக்கமங்கலம்:
குமரி கடலோர கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு கடற்கரை கிராமங்களை இணைத்து சுனாமி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக விளாத்துறை முதல் புதுக்கடை, கருங்கல், திக்கணங்கோடு, திங்கள்நகர், மணவாளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி வழியாக கன்னியாகுமரி வரை சாலையோரம் ராட்சத குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் இந்த குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகுவது வழக்கமாக உள்ளது. இந்தநிலையில் வெள்ளிச்சந்தை அருகே வெள்ளமோடி ஸ்ரீ கிருஷ்ணபுரம் - கல்லுக்கட்டி இடையே சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் ராட்சத குழாயில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டது.
இந்த உடைப்பை குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் கடந்த 22-ந் தேதி சீரமைத்தனர். ஆனால் சீரமைத்த மறுநாளே குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த பகுதியில் வாகனம் ஏறி சென்றதாகவும், இதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனால் மீண்டும் தினமும் தண்ணீர் வீணாகி செல்கிறது. 5 நாட்களாகியும் உடைப்பு சீரமைக்கப்படவில்லை. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.