சிகிச்சை பெறும் பயணிகளுக்கு ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்

ரெயில் தீ விபத்தில் சிகிச்சை பெறும் பயணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Update: 2023-08-26 19:57 GMT

ரெயில் தீ விபத்தில் சிகிச்சை பெறும் பயணிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஆர்.பி.உதயகுமார் ஆறுதல்

மதுரை ரெயில் தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னதாக அவர் தீ விபத்து நடந்த ரெயில் பெட்டியை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த விபத்தில் உடல் கருகி 9 பேர் இறந்துள்ளது வருத்தமான நிகழ்வு. இது நெஞ்சை உலுக்கும் செய்தியாக உள்ளது. அதிகாலை கண் விழித்து பார்க்கும் போது 9 பேர் கருகி இறந்தது வேதனையின் உச்சமாகும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை உடனடியாக தொடர்பு கொண்டு, நேரடியாக சென்று உரிய உதவிகளை செய்ய அறிவுறுத்தினார். மேலும் காயம் அடைந்த பயணிகளுக்கு உரிய நிவாரணமும், ஆறுதலும், இறந்த பயணிகளின் உறவினர்களுக்கு தேவையான வழிகாட்டுதலையும் வழங்குங்கள் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி நான் இங்கு வந்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.

அ.தி.மு.க. சார்பில் இரங்கல்

இந்த ரெயில் பெட்டி முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளது.இதுவரை இப்படிப்பட்ட சம்பவம் மதுரையில் நடந்தது இல்லை. இறந்தவர்கள் குடும்பத்திற்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்த பயணிகளின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். பேரிடர் துறையில் ரெயில்வேக்கு என்று தனியாக உள்ளது. இதில் வெள்ளம், தீ விபத்து எப்படி கையாளுவது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமையல் செய்ய சிலிண்டரை எப்படி அனுமதித்தார்கள் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. கவனக்குறைவாக இருந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்ற விபத்துகள் ஏற்படாதவாறு ெரயில்வே துறை அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், கருப்பையா, மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்