ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை

பயோமெட்ரிக் கருவி சிக்கல்களை தவிர்க்க ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று சேலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

Update: 2023-10-16 19:38 GMT

பயோமெட்ரிக் கருவி சிக்கல்களை தவிர்க்க ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று சேலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

பொது வினியோக திட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் கார்மேகம் வரவேற்றார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் ஹர்சகாய் மீனா, நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது, 'முதல்-அமைச்சர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் சென்று சேருவதை உறுதி செய்யும் வகையில் துறை அமைச்சர்கள் மூலம் மாவட்டத்தில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறார்கள். மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் தொடர்ச்சியாக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்புகின்றனர். மேலும் மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் புதிய ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

பொருட்கள் தரமானதா?

கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

மழையில் நனைவதை தடுக்கும் வகையில் நேரடி கொள்முதல் நிலையத்தில் இருந்து பெறப்படும் நெல் பயிர்கள், உடனடியாக அரவை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை அரிசியாக மாற்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு அனுப்பப்படுகிறது.

அவ்வாறு அனுப்பப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா? என்பதை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான குழுக்கள் ஆய்வு செய்த பிறகே ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.

கண் கருவிழி

கடந்த ஆட்சியில் 376 அரவை நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 700 அரவை நிலையங்களாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு கருப்பு, பழுப்பு அரிசிகள் இல்லாமல் வழங்கும் வகையில் அனைத்து அரவை நிலையங்களிலும் அதை நீக்குவதற்கான எந்திரம் பொருத்தப்பட்டு வருகிறது.

பயோ மெட்ரிக் கருவி சிக்கல்களை தவிர்க்க தமிழகத்தில் உள்ள 36 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி மூலம் பதிவு செய்து பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கடந்த 2½ ஆண்டுகளில் 16 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. தொலைந்த ரேஷன் கார்டுகளை பெறுவதற்கும், தபால் துறையின் மூலம் வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2½ ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் 4 லட்சம் டன் அரிசி சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மாதிரி ரேஷன் கடை

இதையடுத்து கூட்டத்தில் 598 பயனாளிகளுக்கு ரூ.2.1 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர். முன்னதாக சேலம் சீரங்காபாளையம் பகுதியில் உள்ள மாதிரி ரேஷன் கடையை அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர். மேலும் இந்த கடையில் உணவுப்பொருட்களை பொட்டலம் போட்டு மக்களுக்கு வழங்கும் திட்டத்தையும் சோதனை முறையில் தொடங்கி வைத்தனர்.

இந்த கூட்டத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையின் போலீஸ் துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார், மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவாதி ஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்