விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-06-08 16:37 GMT

விழுப்புரம்,

பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 3 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினர்.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கிய நிலையில் நேற்றும் 2-வது நாளாக பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான ரேஷன் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

மேலும் ரேஷன் கடை பணியாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் சம்பத் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் மாவட்ட தலைவர் கோபிநாத், பொருளாளர் ரஷீத், துணைத்தலைவர்கள் பழனிவேல், ஜெகதீஸ்வரன், பாஸ்கரன், தட்சிணாமூர்த்த, இணை செயலாளர்கள் குணசேகரன், தசரதன், கதிர்வேலு, பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்