ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணார்பேட்டையில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லையில் வண்ணார்பேட்டை மேம்பாலம் கீழ்ப்பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரேஷன் கடைகளில் 2 முறை ரசீது பதிவு செய்வதை ரத்து செய்து ஒரு பதிவில் 2 குறுஞ்செய்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பதிவுக்கும், 2-வது பதிவுக்கும் 5 நிமிட கால அவகாசத்தை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம் மற்றும் 4ஜி சிம்கார்டுகள் வழங்க வேண்டும். சிறப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 1 ரேஷன் கார்டுக்கு ரூ.10 வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் செல்லத்துரை பாண்டியன், தென்காசி மாவட்ட தலைவர் இளங்கோ, செயலாளர்கள் நெல்லை ரவிக்குமார், தென்காசி அந்தோணி, பொருளாளர்கள் நெல்லை பண்டாரம், தென்காசி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.