ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-31 11:15 GMT

வந்தவாசி

வந்தவாசி அருகே கீழ்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 50), இவர் தக்கண்டராயபுரம், கீழ்நந்தியம்பாடி, எறும்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் இன்று காலை தக்கண்டராயபுரம் ரேஷன் கடையில் பணியில் இருந்தபோது, இவரது செல்போனுக்கு ஒருவர் போன் செய்து, தான் வந்தவாசி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேசுவதாக கூறி ஆபாசமாக திட்டி, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வந்தவாசி தேரடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொது வினியோக திட்ட விற்பனையாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற குணசேகரன், இதுகுறித்து சக விற்பனையாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆய்வுக் கூட்டம் முடிந்தவுடன் தனியார் திருமண மண்டபம் முன் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஆ.உதயகுமார், மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பின்னர் அவர்கள் குணசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை கண்டித்தும், கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை கைது செய்யக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்