தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களாக பணி புரிவதற்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. இதில் விற்பனையாளர்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி, கட்டுனர்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி என்பதை விண்ணப்பிக்க தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் இளங்கலை, முதுகலை பட்டம், பொறியியல் படித்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்திருந்தனர். திருவாரூர் மாவட்டத்தில் 167 விற்பனையாளர்கள், 15 கட்டுனர்கள் என 182 பணியிடங்களுக்கு 9 ஆயிரத்து 73 பேர் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து இருந்தனர். இதையடுத்து விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு நேற்று முதல் வருகிற 21-ந்தேதி வரை நேர்காணல் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதல்நாளான நேற்று நேர்காணல் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஆண்களை விட பெண்களே அதிகமாக விண்ணப்பித்திருந்தனர். ஒரு நாளைக்கு 1000 பேர் வீதம் அழைக்கப்பட்டு நேர்காணல் நடைபெறுகிறது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.