ரேஷன் கடையில் முறைகேடு:விற்பனையாளர் பணி இடைநீக்கம்

ரேஷன் கடையில் முறைகேட்டில் ஈடுபட்ட விற்பனையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2023-05-30 18:45 GMT

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ரேஷன் கடை செயல்படுகிறது. அந்த கடையில் விற்பனையாளராக ஜெயக்குமார் பணியாற்றுகிறார். டி.வாடிப்பட்டியில் உள்ள ரேஷன் கடையின் விற்பனையாளராகவும் அவரே பொறுப்பில் பணியாற்றி வந்தார். இந்த 2 ரேஷன் கடைகளிலும் முறைகேடு நடப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்தன.

அதன்பேரில், பெரியகுளம் வட்டார பொதுவினியோகத்திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் சதீஷ் கடந்த 24-ந்தேதி அந்த 2 ரேஷன் கடைகளிலும் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு பொருட்கள் இருப்பு குறைவு மற்றும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருக்கு, சார்பதிவாளர் அறிக்கை அளித்தார். அதன்பேரில், ரேஷன் கடை விற்பனையாளர் ஜெயக்குமாரை பணி இடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் ஆரோக்கியசுகுமார் உத்தரவிட்டார். மேலும், ஜெயக்குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸ் நிலையத்திலும் கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் புகார் செய்தார்.

மேலும் செய்திகள்