ரேஷன் கடை ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

நெல்லையில் ரேஷன் கடை ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

Update: 2022-06-08 21:56 GMT

நெல்லை:

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது விநியோக திட்டத்திற்கு என்று தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை சேர்த்து, அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை ரேசன்கடை பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். மாத இறுதியில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 400-க்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு அறிவித்தது.

நேற்று 2-வது நாளாக ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று ரேஷன் கடைக்கு வந்து கடைகளை திறந்து வைத்திருந்தனர். நெல்லை மாநகர பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் திறந்திருந்தன. புறநகர் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்