திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் ரேஷன் கடை கட்டிடம்

திருத்துறைப்பூண்டி அருகே, கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-02-01 18:45 GMT

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி அருகே, கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடை கட்டிடம் திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமத்துவபுரம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரில் 2011-ம் ஆண்டு சமத்துவபுரம் கட்டப்பட்டது. இந்த சமத்துவபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டிய நாளில் இருந்து இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் அவல நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள எழிலூர் ரேஷன் கடைக்கு சென்று அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது

இந்த கட்டிடம் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் ரேஷன் கடை கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இங்கு ஆடு,மாடுகள் தங்கும் இடமாக மாறி வருகிறது. இந்த ரேஷன் கடை கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமத்துவபுரம் குடியிருப்போர் நல சங்க தலைவர் கார்த்தி கூறுகையில், சமத்துவபுரத்தில் குடியிருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததால் தான் நாங்கள் இங்கு வசிக்க வந்ேதாம்.

15 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கிறது

கடந்த 15 ஆண்டுகளாக சமத்துவபுரத்தில் வசித்து வருகிறோம். இங்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு ரேஷன் கடை கட்டப்பட்டது. ஆனால் இது நாள் வரை அந்த கடை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. மேலும் இந்த கட்டிடம் சேதம் அடைந்துள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இந்த ரேஷன் கடை கட்டிடம் திறப்பார்கள் என்ற நம்பிக்கையில் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இன்னும் ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

ரேஷன் கடையை திறக்க வேண்டும்

அத்தியாவசிய பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் செல்ல முடியாமல் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ரேஷன் கடைைய திறக்க கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடையை நேரில் பார்வையிட்டு பழுதடைந்துள்ள ரேஷன் கடை கட்டிடத்தை சீரமைத்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்