குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா உத்தரவின் பேரில் ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் குமாரசாமி, தேவேந்திரன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையில் மேலகாவனூர் பகுதியில் அந்த வழியாக வந்த லாரியை மடக்க பிடித்து சோதனையிட்டனர்.
அந்த லாரியில் தலா 40 கிலோ எடையில் 300 சாக்கு மூடைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. மொத்தம் 12 டன் ரேஷன் அரிசியை சுற்று வட்டார பகுதிகளில் சேகரித்து கொண்டு சென்றது தெரிந்தது.
இந்த அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக லாரியில் இருந்த டிரைவர் மற்றும் லாரி உரிமையாளரான நெல்லை பண்டாரக்குளம் சங்கர்நகர் பகுதியை சேர்ந்த ஆயிரம் (வயது 35), லோடுமேன் மணிகண்டன் (35) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக நெல்லை பகுதியை சேர்ந்த கலைஞர், முதுகுளத்தூர் புழுதிகுளம் பகுதியை சேர்ந்த தவமுருகன் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.