இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து தரவேண்டும்

இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-09-12 16:05 GMT

இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய இடத்தை அளவீடு செய்து தர வேண்டும் என்று கிராம மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்கள் கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் பென்னாகரம் அருகே உள்ள போடூர் பகுதியை சேர்ந்த மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்களுக்கு பெரியார் நகர் அருகில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அந்த பகுதியில் தற்போது அரசின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. எனவே எங்கள் பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தினருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் முன்னுரிமை அடிப்படையில் இலவசமாக வீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

நிலம் அளவீடு

பாலக்கோடு தாலுகா சாஸ்திரமுட்லு கிராம மக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியை சேர்ந்த ஏழ்மை நிலையில் உள்ள 30 குடும்பங்களுக்கு கடந்த ஆண்டு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து வழங்க கோரி துறை அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதுவரை அளவீடு செய்து தரவில்லை. எனவே பட்டா வழங்கிய நிலங்களை அளவீடு செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் சாந்தி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்