ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
ராசிபுரம் அருகே அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை;
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அழியா இலங்கை அம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழியா இலங்கை அம்மன் கோவில்
ராசிபுரம் அருகே கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அம்மனுக்கு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்தக் கோவிலில் மேற்கு மற்றும் தெற்கு புறம் உள்ள வாயில்கள் திறப்பதில்லை. தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் அர்ச்சகர் கோவிலை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலையில் அர்ச்சகர் கோவிலுக்கு வந்து கிழக்குபுற நுழைவு வாயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகள், புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
எச்சரிக்கை மணி
அதில் கோவிலுக்கு வந்த மர்மநபர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தும், சில கேமராக்களை மேல் நோக்கியும் திருப்பி வைத்துள்ளனர். உண்டியலின் மேல் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை மணியை சேதப்படுத்தினர். பின்னர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள் 14 ரூபாயை கோவிலின் ஊஞ்சலில் வைத்துள்ளனர்.
இதையடுத்து கோவிலில் மற்றொரு உண்டியலை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கோவில் உண்டியல் வழக்கமாக 3 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும் என்றும், அப்போது உண்டியலில் சுமார் ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் இருக்கும் என்றும் அங்கிருந்தவர்கள் கூறினர்.
விசாரணை
கடந்த 6 மாதங்களாக உண்டியல் திறக்கப்படவில்லை என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர். கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது உண்டியலில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் இருந்து அவை திருட்டு போனதாக தெரியவருகிறது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் அதில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த கோவிலின் ஐப்பசி மாத திருவிழாவிற்கு இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.