குளங்களில் அரியவகை மீன்கள் சிக்கின
ஏரல் அருகே குளங்களில் அரியவகை மீன்கள் சிக்கின
ஏரல்:
ஏரல் அருகே உள்ள பெருங்குளம், பேரூர் குளங்களில் தொழிலாளர்கள் வலைவீசி மீன்பிடித்தபோது அரியவகை மீன்கள் சிக்கின. இதுகுறித்து முத்துநகர் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் தாமஸ் மதிபாலன் கூறுகையில், '' பெருங்குளம், பேரூர் குளங்களில் கண்டறியப்பட்ட மீன்களானது தென் அமெரிக்கா அமேசான் காடுகளில் காணப்படும் உறிஞ்சி தேளி மீன்கள் ஆகும். இந்த வகை மீன்கள் ஆப்பிரிக்க தேளி மீன்களை விட அதிக அளவில் நீர்நிலைகளை பாதிப்புக்கு உள்ளாக்கிவிடும். இந்த வகை மீன்களை வண்ண மீன் வளர்ப்பவர்கள் மீன் தொட்டியை சுத்தமாக செய்வதற்கு வளர்த்து வந்த நிலையில் தற்போது நமது நீர்நிலைகளில் இந்த மீன்கள் கலந்து விட்டது. இந்த மீனின் தோல் மிகவும் கடினமாகவும் உடல் சதைப்பற்று இல்லாமல் இருக்கும். உணவுக்காக இதனை நாம் பயன்படுத்த முடியாது. பல நாடுகளில் இந்த வகை மீன்கள் தடை செய்யப்பட்டு விட்டது. இந்த மீன்கள் முட்டை இடுவதற்காக கரைப்பகுதிகளை துளையிடும் பழக்கம் உள்ளதால் இந்த மீன்களால் குளத்து கரையோர பகுதி உடையும் அபாயம் உள்ளது. எனவே அரசு தக்க ஆய்வு நடத்தி இந்த வகை மீன்கள் பரவாமல் இருப்பதை வழி செய்திட வேண்டும்" என்றார்.