மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை 'பேய் சிங்கி' இறால்
வேதாரண்யம் அருகே மீனவர்கள் வலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட அரிய வகை ‘பேய் சிங்கி’ இறால் பிடிபட்டது.
வேதாரண்யம் அருகே மீனவர்கள் வலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு பிடிபட்ட அரிய வகை 'பேய் சிங்கி' இறால் பிடிபட்டது.
மீன்பிடி சீசன்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
நாள்தோறும் 5 டன் முதல் 20 டன் வரை மீன்கள் பிடிக்கப்பட்டு ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது மீனவர்களின் வலையில் வாவல், காலா, ஷீலா, திருக்கை மற்றும் நீலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் வகைகள் பிடிபட்டு வருகின்றன.
பேய் சிங்கி இறால்
நேற்று மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வலையில் அதிக அளவில் நண்டும், இறாலும் கிடைத்தது. ஏராளமான சிங்கி இறால்கள் கிடைத்தன. மடக்கி சிங்கி, மட்டி சிங்கி, மணிசிங்கி இறால்கள் அதிக அளவில் கிடைத்தன.
ஆழ் கடலில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை இனமான 'பேய் சிங்கி' இறால் ஒன்றும் மீனவர்கள் வலையில் பிடிபட்டு இருந்தது. இந்த இறால் ஒரு கிலோ 200 கிராம் எடை இருந்தது. இத்தகைய இறால் ஆழ் கடலில் மட்டுமே எப்போதாவது கிடைக்கும்.
5 ஆண்டுகளுக்கு பிறகு...
இதுகுறித்து கோடியக்கரை மீனவர் நல சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேலு கூறும்போது, 'கோடியக்கரைக்கு சீசன் காலத்தில் 50-க்கும் மேற்பட்ட மீன், இறால், நண்டு வகைகள் நாள்தோறும் கிடைக்கும். ஆழ்கடலில் மட்டுமே கிடைக்கும் மிக அபூர்வ இனமான பேய் சிங்கி இறால் ஒன்று 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கிடைத்துள்ளது. இதனை ஏலத்தில் எடுத்து பொதுமக்கள் பார்வைக்காக வைத்துள்ளேன்' என்றார்.