மணிவிழுந்தான் ஏரியில் அரிய வகை பறவை இனங்கள்

Update: 2023-04-10 20:41 GMT

ஆத்தூர் அருகே மணிவிழுந்தான் ஏரியில் அரியவகை பறவை இனங்கள் உள்ளன. இதனை பறவை ஆர்வலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மணிவிழுந்தான் ஏரி

சேலம் மாவட்டத்தில் அழிந்து வரும் பறவை இனங்களை பாதுகாத்திடும் வகையில் சேலம் பறவையியல் கழகத்தை சேர்ந்த கணேஷ்வர், ஏஞ்சலின் மனோ, தலைமை ஆசிரியரும், பறவை ஆர்வலருமான கலைச்செல்வன் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இவர்கள், ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் ஏரியில், 'ஆற்று ஆலாக்கள்' எனப்படும் அரியவகை பறவைகள் முட்டையிட்டு, அடைகாத்து 3 குஞ்சுகளை பொரித்துள்ளதை பாதுகாத்து கண்காணித்து வருகின்றனர்.

இனப்பெருக்கம்

அழியும் வாய்ப்பு உள்ள இனம் என்று பட்டியலிடப்பட்ட இந்த பறவையானது, நன்னீர் உள்ள நீர்நிலைகளையே தேர்ந்தெடுக்கிறது. காலனி வாழ்க்கை அதாவது குழுவாக வாழ்க்கையை நடத்தக்கூடிய பறவையான இந்த 'ஆற்று ஆலா'க்களில் ஒரு இணை மட்டும் மணிவிழுந்தான் ஏரியில் இனப்பெருக்கம் செய்தது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.

அடுத்தபடியாக இந்த பறவையானது விலங்குகளோ, மனிதர்களோ எளிதில் அடைய முடியாத தண்ணீருக்கு நடுவில் உள்ள தீவு போன்ற மண் திட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் 3 முட்டைகளை இட்டு குஞ்சு பொரிக்கிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது, பறவைகள் மேல் கொண்ட அதீத காதலால் முட்டையிட்டு அடைகாப்பது முதல், குஞ்சுபொரித்து பராமரித்து வரும் தற்போது வரை அதன் நடவடிக்கைகளை பறவை ஆர்வலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

கேமரா பதிவு

அதாவது பெற்றோர் பறவைகள் ஒரு நாளைக்கு எத்தனை முறை இரையூட்டுகின்றன, ஒரு குஞ்சு பறவைக்கு எத்தனை மீன்கள் கிடைக்கின்றன என்பது உள்பட மிகத் துல்லியமாக அனைத்து விவரங்களையும் பறவை ஆர்வலர்கள் இருவரும் காலை முதல் மாலை வரை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிறிய அளவில் கூடாரத்தை ஏற்படுத்தி அதற்குள் அமர்ந்து கொண்டு அவர்கள் இந்த பணியை கேமரா பதிவின் மூலம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் பறவையின் சிறப்பை அறிந்து ஆதரவும், வரவேற்பும் அளித்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்