திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் பலாத்காரம்
ரெயில் நிலையத்தில் பழகிய பெண்ணை பலாத்காரம் செய்து பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரெயில் நிலையத்தில் பழகிய பெண்ணை பலாத்காரம் செய்து பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெண் டெய்லர்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான பெண் கோவை மாநகர மத்திய மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
டெய்லரான நான் வேலை தேடி திருப்பூருக்கு சென்றேன். என்னை 15 நாள் கழித்து மீண்டும் வரச் சொன்னதால் சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரெயில் நிலையத்தில் காத்து இருந்தேன்.
அப்போது அங்கு வந்த ஒருவர் எனக்கு அறிமுகமானார்.
அவர், சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது தனது பெயர் சரண் (வயது30) என்றும், கரூரை சேர்ந்த தான் திருப்பூரில் வேலை செய்து வருவதாகவும் கூறினார். இதனால் எங்கள் இருவருக்கும் பிடித்து விட்டது. இதன் காரணமாக நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்.
பலாத்காரம்
அதற்காக தாலி, வளையல், மெட்டி உள்ளிட்ட பொருட்களை வாங்கினோம். இதையடுத்து திருமணம் செய்து கொள்வதற்காக ரெயிலில் கோவை வந்தோம். அப்போது அவர், ரெயிலிலேயே என் காலில் மெட்டி, வளையல் அணிவித்து விட்டார்.
அதன்பிறகு கோவை வந்ததும் ரெயில்நிலையம் அருகே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலாத்காரம் செய்தார்.
உடனே நான் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறினேன். இதனால் அவர் கரூரில் எனது பெற்றோர் முன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினார்.
கொலுசை விற்று பணம் கொடுத்தேன்
அதைத்தொடர்ந்து அவர் என்னை ஈரோட்டுக்கு பஸ்சில் அழைத்துச்சென்றார். நான் ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் இங்கு எனக்கு ஒருவர் ரூ.60 ஆயிரம் தர வேண்டும்,
அது கிடைத்தால் திருமண செலவுக்கு உதவும் என்று கூறினார். மேலும் நான் அவரிடம் வாங்கிய ரூ.4 ஆயிரத்தை கொடுக்க என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். அதை நம்பிய நான் எனது காலில் அணிந்து இருந்த கொலுசை விற்று பணம் கொடுத்தேன்.
அதை வாங்கிய சரண் கழிவறைக்கு சென்று விட்டு வருவதாக கூறினார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது.
எனவே திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்து பஸ் நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற சரண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சரணை வலைவீசி தேடி வருகிறார்கள்.