ராணிப்பேட்டை சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது

ராணிப்பேட்டை சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது என்று காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறையில் கலெக்டர் வளர்மதி பேசினார்.

Update: 2023-10-12 18:23 GMT

பயிற்சி பட்டறை

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறை கலெக்டர் வளர்மதி தலைமையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாநில காலநிலை மாற்ற இயக்க உதவி திட்ட இயக்குனர் மனிஷ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

பூமியின் வெப்ப அளவு அதிகரித்து இயற்கை பேரிடர்கள், வெள்ளங்கள், பூகம்பங்கள் அதிகரித்து வருகிறது. இந்த காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்திட முதல்-அமைச்சரின் சீரிய திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்திட உறுதி எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒரு வரைவு திட்டம் தயாரிக்க ஒருங்கிணைப்புக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுடைய துறையின் பங்களிப்பின் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதுவே, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் முக்கிய பணியாகும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

இயற்கையை அழித்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகளவில் தான் இருக்கும். அதைத்தான் தற்போது ஒருசில மாநிலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு, அதிக மழைப்பொழிவு, நிலச்சரிவு, வறட்சி போன்றவற்றை கண்கூடாக பார்த்து வருகின்றோம்.

ராணிப்பேட்டை மாவட்டம் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருக்கிறது. ஆகவே சுற்றுச்சூழலை பாதுகாக்க நம் வீட்டினை சுற்றிலும் இடைவெளி உள்ள இடங்களில் அந்தந்த பகுதியின் மண் வளத்திற்கு ஏற்ற பாரம்பரிய மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணா பல்கலை கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குனர் லதா மகேஷ், மாவட்ட வன அலுவலர் கலாநிதி, பிரபாகரன் ஆகியோரும் பேசினர்.

நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு கலெக்டர் மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி வெற்றிச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்