கோவை மாநகராட்சி: திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-08-05 05:23 GMT

கோவை,

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, கோவை மேயர் பொறுப்புக்கு நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் ரங்கநாயகி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. திமுக அமைச்சர்கள் நேரு, முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு 29-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரங்கநாயகி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. இதையடுத்து, 19-வது வார்டு கவுன்சிலரான கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்டார். கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார்.

ஆனால், கடந்த சில மாதங்களாக திமுக கவுன்சிலர்களே மேயர் கல்பனா மீது அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றது. இதையடுத்து, திமுக தலைமை இதுகுறித்து விசாரித்தது. இதையடுத்துதான், கோவை மேயர் கல்பனா கடந்த 3-ம் தேதி ராஜினாமா கடிதம் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்