நாகூர் தர்காவில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
நாகூர் தர்காவில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
நாகை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
ரம்ஜான் பண்டிகை
இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரமலான் மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின்படி முகமது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
ரமலான் மாதத்தின் தொடக்கத்திலும், கடைசி நாளிலும் பிறையை பார்த்து நோன்பு என்னும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இஸ்லாத்தின் 5 தூண்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
ஏழைகளின் பசியை உணர...
இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும் கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களை காட்டிலும், ரம்ஜான் பண்டிகை வரும் ரமலான் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாக கருதப்படுகிறது.
ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பவர்கள், சூரிய உதயத்துக்கு முன்பு இருந்து சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை தண்ணீர் கூட பருகாமல், எதுவும் சாப்பிடாமல் நோன்பு இருக்கின்றனர். ஏழை, எளியவர்களின் பசியை உணர வேண்டும் என்றால் நாம் பசியோடு இருந்து பசியை உணர்ந்தால் தான், பசித்தவர்களுக்கு உணவு வழங்க முன் வருவோம் என்ற அடிப்படையில் நோன்பு கடமையை நிறைவேற்றுபவர்களுக்கு அல்லாவின் திருப்தியும், நன்மைகளும், பாவ மன்னிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நாகூர் ஆண்டவர் தர்கா
ரமலான் மாதத்தை பொறுத்தவரை அனைத்து இஸ்லாமியர்களுக்குமே, அல்லாவை அதிகம் நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும் கருதப்படுகிறது. அருள் நிறைந்த மாதமாக இருப்பதால் இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க தவறுவது இல்லை.
இந்த ஆண்டுக்கான ரம்ஜான் பண்டிகை நேற்று நாகை மாவட்டம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. உலகப்பிரசித்திப்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். சிறுவர்கள், பெரியவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்.