ராமேசுவரம்-மதுரை சிறப்பு ரெயிலில் ரூ.70 கட்டணம்

வாரம் 3 முறை இயக்கப்படும் ராமேசுவரம்-மதுரை சிறப்பு ரெயிலில் ரூ.70 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Update: 2022-10-10 21:10 GMT

மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பகல் நேரத்தில் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ரெயிலை சிறப்புக்கட்டண ரெயிலாக இயக்குவதற்கு ரெயில் பயணிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அத்துடன், ஏற்கனவே ஒரு ரெயில் ராமேசுவரத்தில் இருந்து தினந்தோறும் காலை 5.40 மணிக்கு மதுரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரெயில் காலை 6.20 மணிக்கு புறப்படுகிறது. இதனால், பயணிகளிடம் வரவேற்பை பெறுமா என்பதும் கேள்விக்குறியாக இருந்தது. ராமேசுவரத்தில் உள்ள ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனையில் நடந்து வரும் சீரமைப்பு பணிக்காக, ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரைக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்படுகிறது. அந்த ரெயிலை பயணிகளுடன் இயக்க ரெயில்வே திட்டமிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், சிறப்பு கட்டணத்தில் இயக்குவது சர்ச்சைக்குள்ளானது. ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு பஸ்சில் டிக்கெட் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்படுகிறது என்று ரெயில்வே தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், ஒரு பஸ்சில் 50 பயணிகள் தான் பயணிக்க முடியும். ரெயிலில் சுமார் 2 ஆயிரம் பயணிகள் வரை பயணம் செய்ய முடியும் என்பதால், எரிபொருள் செலவு மிகவும் குறைவு. இந்த நிலையில், கோட்ட மேலாளர் உத்தரவின் பேரில், சிறப்புக்கட்டணம் ரத்து செய்யப்பட்டு இந்த சிறப்பு ரெயில், வழக்கமான எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் நேற்று முதல் இயக்கப்பட்டது. அதன்படி, இந்த ரெயிலில், ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு ரூ.70, ராமநாதபுரத்தில் இருந்து ரூ.55, பரமக்குடியில் இருந்து ரூ.45, மானாமதுரையில் இருந்து ரூ.30 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்