மதுரை கோட்ட ரெயில்வேயில் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 2¾ மணி நேரம் தாமதம்
மதுரை கோட்ட ரெயில்வேயில் ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 2¾ மணி நேரம் தாமதமாக சென்றது
மதுரை கோட்ட ரெயில்வேக்கு உள்பட்ட ராமேசுவரம் பணிமனையில், சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் ரெயில்கள் பராமரிப்புக்காக மதுரை பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால், ரெயில்களின் இயக்கத்தில் காலதாமதம் ஏற்படுகிறது.இதற்கிடையே, ராமேசுவரத்தில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரி வரை வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் பராமரிப்பு காரணங்களுக்காக நேற்று இரவு 9 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக சுமார் 2¾ மணி நேரம் தாமதமாக அதாவது, நள்ளிரவு 11.45 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனால், இந்த ரெயிலுக்கு முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.