கொட்டும் மழையில் ராமேசுவரம் கடலில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

ஆடி அமாவாசையான நேற்று ராமேசுவரத்தில் பலத்த மழை கொட்டியது. ஆனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர்.

Update: 2022-07-28 16:53 GMT

ராமேசுவரம், 

ஆடி அமாவாசையான நேற்று ராமேசுவரத்தில் பலத்த மழை கொட்டியது. ஆனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர்.

ஆடி அமாவாைச

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் விளங்குகிறது.

இந்த கோவிலில் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பண பூஜை செய்தும் வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட அதிகாலை 2 மணியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவியத்தொடங்கினர். ஆனால், அதிகாலை 4 மணியில் இருந்து 7 மணி வரையிலும் சுமார் 3 மணி நேரம் பலத்த மழை கொட்டியது.

தர்ப்பண பூஜை

மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் இறங்கி புனித நீராடினர். கடற்கரையில் அமர்ந்து, தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர்.

பின்னர் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் புனித நீராட வடக்கு ரதவீதி வாசல் பகுதியில் இருந்து கிழக்கு வாசல் பகுதி வரையிலும் கையில் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்தபடியும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 7 மணிக்கு பிறகு மழை குறைந்ததால் அதன் பின்னர் பக்தர்கள் வருகை இன்னும் அதிகமானது. லட்சக்கணக்கானோர் திரண்டதால் அக்னி தீர்த்த கடற்கரை பக்தர்களாக காட்சி அளித்தது.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் நேற்று பக்தர்களால் ராமேசுவரம் களைகட்டி காணப்பட்டது..

கடற்கரை மட்டுமின்றி,, சன்னதி தெரு, 4 ரதவீதகள், திட்டக்குடி, பஸ் நிலையம், ரெயில் நிலைய சாலை, தனுஷ்கோடி சாலை உள்ளிட்ட நகரின் அனைத்து முக்கிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. கோவிலின் உள்ளே நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு சென்று வரும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனை கோவில் துணை ஆணையர் மாரியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிறப்பு ரெயில்-பஸ்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரையில் இருந்து ராமேசுவரத்திற்கு நேற்று சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. பல்வேறு நகரங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. சிறப்பு ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

Tags:    

மேலும் செய்திகள்