ராமநாதபுரத்தில் விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு

ராமநாதபுரத்தில் விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட உள்ளதாக கூட்டத்தில் நகர சபை தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

Update: 2023-08-30 18:45 GMT

ராமநாதபுரத்தில் விரைவில் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட உள்ளதாக கூட்டத்தில் நகர சபை தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

நகராட்சி கூட்டம்

ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் அபிதாபர்வீன், என்ஜினீயர் ரெங்கராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- குமார்: பாதாள சாக்கடை குழாய்கள் சரிசெய்வதாக கூறி மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது. ஆனால் பாதாள சாக்கடை பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தலைவர்: பாதாள சாக்கடை பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.11 கோடி அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒருவாரத்திற்குள் வந்துவிடும். அதன்பின்னர் பழுதடைந்த குழாய்களை மாற்றி விட்டால் பாதாள சாக்கடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகிவிடும்.

அய்யனார்: கூட்ட அஜென்டாவில் ஒரே பணிக்கு 2 தீர்மானங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் குழப்பம் ஏற்படுகிறது. தலைவர்: மன்ற அனுமதி கோரி ஒரு தீர்மானம், பணிகளை ஒப்படைக்க ஒரு தீர்மானம். அய்யனார்: போடப்படாத சாலையை போட்டதாக தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. மன்ற பொருளில் தவறான தகவலை தெரிவிக்க வேண்டாம்.

தலைவர்: அந்த பணி நடைபெறும்போது முதல்-அமைச்சர் வருகைக்காக நிறுத்தப்பட்டது. அதனால் தாமதமாகிவிட்டதால் இந்த குழப்பம். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் சரிசெய்யப்படும்.

குடிநீர் வினியோகம்

காளி: தெருவிளக்குகள் எரியாததால் மக்கள் நடமாட முடியவில்லை. எல்.இ.டி. விளக்குகள் வந்துவிட்ட நிலையிலும் இன்னும் பொருத்தப்படாதது ஏன்? தலைவர்: விளக்குகள் பொருத்துவதற்கு தேவையான இதர சாமான்கள் வரவேண்டி உள்ளது. விரைவில் வந்துவிடும். இந்துமதி: எனது வார்டில் பாதாள சாக்கடை மூடிகள் 11 இடங்களில் போடச்சொல்லியும் இதுவரை போடவில்லை. அடிகுழாய் பழுது குறித்து புகார் செய்தால் சரிசெய்வதில்லை. குடிநீர் வருவது கிடையாது. லாரி டிராக்டரில் குடிநீர் சப்ளை செய்வதாக கூறுகிறீர்கள். எனது வார்டுக்கு ஒருநாள் கூட வந்தது கிடையாது. தலைவர்: பாதாள சாக்கடை மூடி உடனடியாக போடப்படும். இனி குடிநீர் சப்ளை செய்ய வரும்போது உங்களிடம் கையொப்பம் வாங்கப்படும்.

கவுன்சிலர்கள் எதிர்ப்பு

குமார்:- பொதுவான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி பேசியபோது அதற்கு சில கவுன்சிலர்கள் அவர்களது வார்டு பிரச்சினைகள் பற்றி மட்டும் கேள்வி எழுப்பட்டும். கூட்ட நேரத்தினை வீணடிக்க வேண்டாம் என்று கூறி வாதிட்டனர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது. பஸ் நிலைய கடைகளை வாடகைக்கு எடுத்தவர்களின் கேட்பு தொகையை நீக்கம் செய்வது தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேட்பு தொகையை செலுத்தாதவர்களுக்கு இனி புதிய பஸ்நிலையத்தில் கடை கொடுக்க கூடாது என்று கூறினர். இவ்வாறு கூட்டம் நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்