ராமநாதபுரம்: கோவிலில் தெய்வ சிலைகளை பெயர்த்து எடுத்து மர்ம நபர்களால் பரபரப்பு...!

உத்தரகோசமங்கை அருகே கோவிலின் பரிவார தெய்வ சிலைகளை நள்ளிரவில் பெயர்த்து எடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2022-09-10 11:25 GMT

ராமநாதபுரம்,

ராமாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருகே உள்ளது புதுக்குளம். இந்த ஊர் காட்டுப்பகுதியில் தர்ம முனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் முத்து முனியாண்டி சுவாமி, கருப்பணசுவாமி, செண்பகவள்ளி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் அமைந்துள்ளது.

முட்புதர்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோவிலில் மாசி களரி திருவிழாவிற்கு அதன் பூர்வீக குலதெய்வ பாத்தியப்பட்ட பக்தர்கள் வந்து சாமி கும்பிடுவது வழக்கம். மற்ற நாட்களில் வெள்ளி செவ்வாய் போன்ற தினங்களில் யாராவது பக்தர்கள் வந்தால் கோவில் திறந்து பூஜைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த கோவிலில் நேற்று நள்ளிரவில் சில மர்ம நபர்கள் சென்று அங்கிருந்த பரிவார தெய்வங்களான பைரவர், ராக்காயி அம்மன், இருளாயி அம்மன், செண்பகவள்ளி அம்மன், பூலோகம் காத்த அம்மன் உள்ளிட்ட சிலைகளை பெயர்த்து எடுத்துள்ளனர்.

சிலைகளை பெயர்த்து எடுத்த மர்ம நபர்கள் விடிந்து விட்டதால் கோவிலின் அருகே உள்ள முட்புதர்கள் சூழ்ந்த பகுதியில் மறைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்தவர்கள் பரிவார தெய்வ சிலைகளை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருஉத்தரகோசமங்கை போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெயர்த்து எடுக்கப்பட்ட சிலைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிலில் சிலைகளை பெயர்த்து எடுத்த மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்