ராமநாதபுரம் மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-08-22 18:46 GMT

தமிழகத்தில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் முதலாம் ஆண்டு தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மருத்துவ கல்லூரிகள்

தமிழகத்தில் ராமநாதபுரம், திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்டப்பட்டன. இந்த மருத்துவ கல்லூரிகளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

இதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி ரூ.345 கோடியில் திறக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டு பாட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

100 சதவீத தேர்ச்சி

இதுதவிர, மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் 50 பேருக்கும் இந்த கல்லூரியில் தனித்தளத்தில் பாட வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பாட தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் 100 பேரும் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ராமநாதபுரம் கல்லூரியில் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவ-மாணவிகள் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தலைசிறந்த பேராசிரியர்கள் மூலம் ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த கல்வி கற்பிக்கப்படுவதால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் அதிகமானவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியை தேர்வு செய்து வருவதாக மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்