ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணானது

விராலிமலை அருகே ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான குடிநீர் வெளியேறி வீணானது.

Update: 2023-04-15 18:25 GMT

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம்

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் கடந்த 2007-ம் ஆண்டு திருச்சி முத்தரசநல்லூரிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் இனாம் குளத்தூர், பொருவாய், விராலிமலை வழியாக ராமநாதபுரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு அதன் மூலம் பல்வேறு பகுதிகள் குடிநீர் பெற்று பயனடைந்து வருகிறது. அதிலும் விராலிமலை பகுதி மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும் குடிநீரானது மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை விராலிமலை அருகே மே.குளவாய்ப்பட்டி பகுதியில் சாலையோரத்தில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீரென அதிக சத்தத்துடன் உடைப்பு ஏற்பட்டு குடிநீரானது சுமார் 50 அடிக்கு மேலே பீய்ச்சி அடித்தது.

வெயிலில் ஆனந்த குளியல்

திடீரென தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்ததால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து அங்கிருந்தவர்கள் பொருவாயில் உள்ள நீர் உந்து நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பல மணி நேரம் ஆகியும் அங்கிருந்து பணியாளர்கள் யாரும் வராததால் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீரானது வீணாக சாலையில் ஓடியதுடன் அருகிலிருந்த குடியிருப்பு பகுதிகள் வழியாக விவசாய நிலங்கள் இருக்கும் பகுதிக்குள்ளும் சென்றது.

இதற்கிடையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததாலும் அருவியிலிருந்து தண்ணீர் கொட்டுவது போல் இருந்ததாலும் உற்சாக மிகுதியில் குடிநீரில் ஆனந்த குளியல் போட்டனர்.

பராமரிப்பு பணிகள் தொடங்க கோரிக்கை

சில மணி நேரத்திற்கு பிறகு பொருவாயில் உள்ள ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட நீர் உந்து நிலையத்திலிருந்து வந்த அலுவலர்கள் முதல் கட்டமாக நீர் வெளியேறுவதை குறைப்பதற்கு வடுகபட்டி ஊராட்சியில் உள்ள குளத்திற்கு செல்லும் வகையில் அதன் வழியாக சென்ற ராட்சதக்குழாயை திறந்து விட்டனர். இதனால் பல அடி தூரத்திற்கு மேலே சென்ற தண்ணீரானது படிப்படியாக குறைந்தது. இதையடுத்து குளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண்கள் சிலர் குடங்களில் தண்ணீரை எடுத்து சென்றனர்.

இதுகுறித்து மே.குளவாய்ப்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:- காலை 9.30 மணியளவில் இந்த குடிநீர் குழாயில் இருந்து அதிக சத்தத்துடன் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் யாரும் வராததால் பல மணி நேரம் குடிநீர் சாலையோரத்திலும், குடியிருப்பு பகுதிகளுக்கும் சென்றது. இந்த குடிநீர் குழாய்கள் அமைத்து பல ஆண்டுகள் ஆவதால் ஆங்காங்கே சில இடங்களில் அவ்வப்போது உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்று வருகிறது. எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க இந்த திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கி பராமரிப்பு பணிகள் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரி விளக்கம்

இதுகுறித்து ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட பொருவாய் நீர் உந்து நிலைய உதவி செயற்பொறியாளர் மணிகண்டன் கூறியதாவது:- மேப்பூதகுடி குளவாய்பட்டி பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து அதிகளவில் நீர் வெளியேறிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே நீர் உந்து நிலையத்தில் இருந்து இப்பகுதி வழியாக நீர் செல்வதை நிறுத்தி விட்டோம். இருப்பினும் தண்ணீரின் அழுத்தத்தினால் இக்குழாயில் இருந்த இணைப்பு நட்டுகள் முழுவதும் உடைந்ததாலேயே இவ்வளவு நேரம் குடிநீர் வீணாக சென்றது. தற்போது இந்த குழாயில் ஏற்பட்ட பழுதை இன்று (நேற்று) இரவு 10 மணிக்குள் சரி செய்து ராமநாதபுரத்திற்கு குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்