ரம்ஜான் சிறப்பு தொழுகை
பேரணாம்பட்டில் 12 இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.;
பேரணாம்பட்டில் பெரிய ஈத்கா, சிறிய ஈத்கா, நவாப் மஸ்ஜித், ஏரிகுத்திமேடு அப்ரார் ஈத்கா, தவ்ஹீத் திடல், கோழிப்பண்ணை உள்ளிட்ட 6 இடங்களில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியாக சிறப்பு தொழுகை நடந்தது.
தொழுகையின் போது சாரல் மழை பெய்தது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தொழுகையில் ஈடுபட்டனர்.
இதேபோல பேரணாம்பட்டு அருகே உள்ள வளத்தூர், இதயாத்பூர், எம்.வி.குப்பம்-புதூர், அழிஞ்சிகுப்பம், குளிதிகை, வசந்தபுரம் ஆகிய 6 கிராமங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொழுகை முடிந்த பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பேரணாம்பட்டில் வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவபிரசாத், குப்பன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.