கைத்தறி நெசவாளர்கள் தாசில்தாரிடம் மனு
கைத்தறி நெசவாளர்கள் தாசில்தாரிடம் மனு
காங்கயம்
கைத்தறி நெசவாளர்கள் சார்பில் பட்டுநூல் கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும். 21 கைத்தறி ரகங்களை கைத்தறிக்கு என்று உறுதிப்படுத்த வேண்டும். இலவச வேட்டி சேலை கைத்தறியில் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டுநூல் ஜரிகை முதலிய மூலப்பொருட்கள் விலை உயர்வு ஏற்ற இறக்கம் இன்றி சீரான முறையில் விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி செசவாளர்களுக்கு குறைந்த கூலியை உயர்த்தி கொடுக்க வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த தனியார் நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி காங்கயம் வட்டார கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் சார்பில் காங்கயத்தில் பேரணி நடந்தது. பேரணிக்கு சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் கே.திருவேங்கடசாமி தலைமை தாங்கினார். பேரணி காங்கயம், திருப்பூர் சாலை, விடுதி பஸ் நிறுத்தத்தில் இருந்து காங்கயம் பஸ் நிலைய ரவுண்டானா வழியாக தாசில்தார் அலுவலகம் வரை சென்றது. அங்கு தாசில்தார் புவனேஸ்வரியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். இந்த பேரணியில் சங்கத்தின் நிர்வாகிகள், காங்கயம் வட்டார கைத்தறி நெசவாளர்கள், பெண்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.