மழைநீர் வடிகால்கள்: சென்னையில் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

சென்னை வால்டாக்ஸ் சாலை உள்பட பல இடங்களில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார். குழாய்களில் அடைப்பு ஏற்படாதவகையில் அதிக பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Update: 2022-11-02 22:17 GMT

சென்னை,

சென்னையில் தொடர்மழை பெய்துவரும் நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் மூலம் மழைநீர் வடிந்து செல்கிறதா என வால்டாக்ஸ் ரோடு, ரெட்டேரி மற்றும் கொளத்தூர், பெரியார்நகர் ஆகிய பகுதிகளில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.

அவருடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா மற்றும் பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் உடன் சென்றனர்.

அதிகாரிகளுக்கு அறிவுரை

ஆய்வின்போது அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை கொளத்தூர் பெரியார்நகர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.77.81 கோடி செலவில் 3 மாடிகளுடன் 220 படுக்கை வசதிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. தரைத்தளத்தில் அவசரசிகிச்சைப் பிரிவு, சிறப்பு சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, காந்த அதிர்வலை மற்றும் ஆய்வகம் போன்றவை அமைக்கப்பட உள்ளன.

முதல் தளத்தில் மகப்பேறு பிரிவு, ரத்த வங்கி, அறுவை சிகிச்சைக் கூடம் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவும், 2-ம் தளத்தில் முழு உடல் பரிசோதனை, ஆண் மற்றும் பெண் சிகிச்சை அறைகள், காது, மூக்கு, தொண்டை பிரிவு மற்றும் கட்டண அறைகளும் அமைக்கப்பட உள்ளன.

மூன்றாம் தளத்தில், இதர மருத்துவம் சார்ந்த கட்டிடம் அமைக்கப்படுகிறது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, வரும் நாட்களில் குழாய்களில் அடைப்பு ஏற்படாத வண்ணம் இப்பணியில் அதிக பணியாளர்களை அமர்த்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்