நீர் பிடிப்பு பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-10-16 21:12 GMT

பவானிசாகர்

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணையாகவும் தமிழகத்தின் 2-வது பெரிய அணையாகவும் விளங்குவது பவானிசாகர் அணையாகும். அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த ஜூன், ஜூலை மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. பொதுப்பணித்துறை விதியின்படி அணையின் பாதுகாப்பை கருதி அக்டோபர் மாதம் இறுதி வரை 102 அடிக்கு மேல் தண்ணீர் தேக்கக்கூடாது என்பதால் பவானி ஆற்றில் உபரி தண்ணீர் திறக்கப்பட்டது.

102 அடியில் இருந்து குறைந்தது

இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. அதே சமயம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் 57 நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 30-ந் தேதி இரவு 8 மணிக்கு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் இருந்து குறைய தொடங்கியது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பு

இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 1,643 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.60 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 618 கன அடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.78 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 100 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,300 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது.

வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதாலும், எந்த நேரத்திலும் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டிவிடும் என்பதாலும் பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதனால் பவானிசாகர் அணையில் இருந்து பவானி கூடுதுறை வரை பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறை சார்பில் விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்