தூத்துக்குடியில் வானவில் மன்றம்: கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-28 18:45 GMT

தூத்துக்குடியில் அறிவியல், கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றத்தை கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்.

வானவில் மன்றம்

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் தொடக்க நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது, தமிழக முதல்-அமைச்சர் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வானவில் மன்றம் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார். வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் சில பாடங்கள் மாணவர்களுக்கு புரியாது. மாணவர்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இந்த திட்டத்தில் பாடங்கள் செயல்முறையாக செய்து காண்பிக்கப்படுகிறது. அப்போது பாடங்கள் மாணவர்கள் மனதில் எளிதில் பதியும். மாணவர்கள் யூடியுப்பில் அறிவியல் சம்பந்தமான வீடியோக்களை பார்த்தும், நிறைய சந்தேகங்களை பள்ளியில் ஆசிரியர்களிடம் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் எதைப் படித்தாலும் ஆர்வத்துடன் புரிந்து படிக்க வேண்டும் என்று கூறினார்.

அமைச்சர் கீதாஜீவன்

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் மூலம் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்து உள்ளார். அறிவியல், கணிதம், பொறியியல் தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் பணிபுரிய வேண்டும். மாணவர்கள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வியிலும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நீங்கள் சிறந்த பொறியாளர்களாக, மருத்துவர்களாக, சான்றோர்களாக, தலைவர்களாக உருவாக நன்றாக படிக்க வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்