சூறாவளி காற்றுடன் மழை
செஞ்சியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் வாழைமரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன
செஞ்சி
கத்தரிவெயில்
தமிழகம் முழுவதும் கத்தரிவெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்பத்தால் புழுக்கத்தின் பிடியில் சிக்கி தவித்து வரும் மக்கள் கோடை மழை பெய்து குளிர்விக்காதா? என்ற ஏக்கத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
சூறாவளி காற்றுடன் மழை
செஞ்சியில் நேற்று முன்தினம் காலையில் வெயில் சுட்டெரித்தது. பின்னர் மாலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்தவற்கான அறிகுறிகள் தென்பட்டன. பின்னர் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை சுமார் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. ஆனால் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பேனர்கள் சாய்ந்தன. வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையோரமாக நிறுத்தி விட்டு பாதுகாப்பான இடங்களில் ஒதுங்கி நின்றனர்.
மின்கம்பங்கள் சேதம்
சில இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்தன. செஞ்சி கோட்டை பகுதியில் நின்ற மின்கம்பம் உடைந்து அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து சேதம் அடைந்தன.
மழை பெய்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் செஞ்சி நகரமே இருளில் மூழ்கியது. காற்று ஓய்ந்த பிறகே மீண்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது. செஞ்சியில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.