நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மழைநீர் ஒழுகியது; மின்சாரம் துண்டிப்பு- பயணிகள் அவதி

Update:2024-07-14 09:00 IST

சென்னை,

சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இந்தநிலையில், சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.20 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. ரெயில் மேல்மருவத்தூர் சென்று கொண்டிருந்தபோது ரெயிலின் 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் மழை நீர் ஒழுகத் தொடங்கியது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், அந்த பெட்டி முழுவதும் வேகமாக தண்ணீர் ஒழுகியது. இதனால், தரை முழுவதும் தண்ணீர் தேங்கியது. பெட்டியில் மழைநீர் ஒழுகியதால் மின் விளக்குகளில் தண்ணீர் பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால், அந்த பெட்டி முழுவதும் இருளில் மூழ்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்தனர். மின்சார துண்டிப்பால் குளிர்சாதன இணைப்பும் தடைபட்டது. இதனால், என்ன செய்வதென தெரியாமல் பயணிகள் திகைத்து நின்றனர். மழைநீர் ஒழுகியது குறித்து அதிகாரிகளிடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். புகாரைத் தொடர்ந்து, ரெயிலானது விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு சென்றதும் அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியில் தேங்கிகிடந்த தண்ணீரை வெளியேற்றினர்.

பின்னர், மின்தடை பிரச்சினை சரிசெய்யப்பட்டு, ரெயில் தாமதமாக புறப்பட்டு நெல்லை நோக்கி சென்றது. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மழை நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதற்கு ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்