'ஓட்டை பஸ்சுக்குள் ஒழுகிய மழைநீர்'

நத்தம்-அலங்காநல்லூர் இடையே இயக்கப்பட்ட ஓட்டை பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகியது. இதனால் மழையில் நனைந்து, நடுங்கியபடி பயணிகள் பரிதவித்தனர்.

Update: 2023-07-08 16:21 GMT

 மழையில் நனைந்த பயணிகள்

நத்தம் பஸ் நிலையத்தில் இருந்து முளையூர் வழியாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல இந்த பஸ் நேற்று மதியம் 2 மணிக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில், 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ் புறப்பட்ட சிறிதுநேரத்தில் பலத்த மழை கொட்டியது. ஓட்டை உடைசலாக இருந்த அந்த பஸ் மழைநீருக்கு அடைக்கலம் கொடுத்தது என்றே சொல்லலாம்.

அதாவது மேற்கூரை வழியாக மழைநீர் பஸ்சுக்குள் புகுந்தது. இதனால் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் திடுதிப்பென எழுந்து நின்றனர். இருப்பினும் அவர்கள் மீது மழை தண்ணீர் விழுந்து கொண்டே இருந்தது. இதனால் பயணிகள் செய்வதறியாது திகைத்தனர். தாங்கள் வைத்திருந்த பொருட்கள், துணியை தலையில் போட்டு சில பயணிகள் மூடினர். எதுவும் எடுத்து வராத பயணிகளும் பஸ்சில் இருந்தனர். மழையில் இருந்து தப்பிக்க முடியாத பயணிகளின் உடலும், உடையும் நனைந்து விட்டது.

முக்காடு போட்ட டிரைவர்

முதிர் வயது பயணிகள் சிலர் குளிர் தாங்க முடியாமல் நடுங்கி கொண்டே பயணித்தனர். தரையில் இருந்தால் கூட எங்கேயாவது ஓடிச்சென்று தஞ்சம் அடைந்து மழையில் நனையாமல் தப்பித்து இருக்கலாம். ஆனால் பாழாய் போன இந்த பஸ்சில் ஏறி இப்படி சிக்கி கொண்டோமே என்று பயணிகள் வேதனையுடன் வசைப்பாடினர்.

பயணிகளின் பரிதவிப்பு இப்படி இருக்க, மழைக்கு டிரைவரும் தப்பிக்கவில்லை. அவரது இருக்கையின் மேல் பகுதியில் உள்ள ஓட்டையில் இருந்து மழைநீர் ஒழுகியது. இதனால் டிரைவரும் தனது தலையில் துணியால் முக்காடு போட்டப்படி தனது பணியை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

சுமார் ½ மணிநேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையால் பயணிகளின் நிலைமை பரிதாபமாகி விட்டது. பாலமேடு, அலங்காநல்லூர் வரை பயணிகள் பஸ்சில் நனைந்து கொண்டே பயணித்தனர். எனவே நத்தம்-அலங்காநல்லூர் இடையே இயக்கப்படுகிற ஓட்டை உடைசலான அந்த பஸ்சை நிறுத்தி விட்டு புதிய பஸ்சை இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்